ஈரோட்டில் பள்ளி மாணவர்களே தான் படித்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய சம்பவம் போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் அங்கிருந்த ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுமையும் ஆய்வு செய்தனர். ஆய்வில் வெடிகுண்டு மிரட்டல் என்பது போலி என தெரியவந்தது.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த மாணவர்கள் இரண்டு பேர் சேர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்பியது தெரியவந்துள்ளது. அண்மையில் அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து தங்கள் பள்ளிக்கும் இதேபோல் விடுமுறை விட வேண்டும் என்பதற்காக இப்படி செய்ததாக மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோர்களை அழைத்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.