கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (20.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருந்தார். அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் (20.12.2023) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (20.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென்காசி மாவட்டத்தில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடக்கும் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருந்த உத்தரவும் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.