கரூர் மாவட்டம் புகலூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஹிட்டாச்சி வாகனம் நீரில் மூழ்கியதில் ஓட்டுநர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், புகழூர் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ரூபாய் 406.50 கோடி மதிப்பீட்டில் கரூர் - நாமக்கல் மாவட்டம் இடையே நஞ்சைபுகழூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுமான பணி கடந்த 2020 ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதை ஓரமாக ஒதுக்கி விடுவதற்காக மூன்று ஹிட்டாச்சி மூலமாக கரை அமைத்துள்ளனர். அப்போது, நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(36) என்பவர் ஹிட்டாச்சி வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த போது வாகனம் நீரில் மூழ்கியது. ஹிட்டாச்சி வாகனம் ஏசி பொருத்தப்பட்டு உள்ளது. நீரில் மூழ்கிய நிலையில் கதவை திறக்க முடியாமல் ஓட்டுநர் நீரிலே மூழ்கியுள்ளார். அதன் அருகில் மற்ற இரு ஹிட்டாச்சி வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வந்து நீரில் மூழ்கிய ஹிட்டாச்சியை மேலே தூக்கி உள்ளனர். அப்போது ஹிட்டாச்சி ஓட்டுநர் ராஜேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் உடலை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில், போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு ராஜேஷ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ராஜேஷ் உடலைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த ராஜேஷிற்கு மனைவி மற்றும் 5 வயது, 3வயது என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.