பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த விருது நகரிலும் அம்மாவட்டத்திலுள்ள பல ஊர்களிலும் விழாக்கள் களை கட்டி வருகின்றன. விருதுநகரில் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் கலந்துக்கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “காமராஜர் வழியில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அதே வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். ஒருவர் எப்படி வாழ்ந்து மறைய வேண்டும் என்பதற்கு பெருந்தலைவர் காமராஜர் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார்.
கல்வித்துறையில் இந்தப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளின் கோரிக்கைகளை 24 மணி நேரத்தில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதைச் செய்து கொடுப்பேன். நமது மாநில மாணவர்கள் பிற மாநிலங்களுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் எழுதப் படிக்க சிரமம் அடைகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு எளிதாக ஆங்கிலம் பேசும் வகையில் 2000 வார்த்தைகள் அடங்கிய சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவ மாணவர்கள் எளிதாக ஆங்கிலத்தில் பேச முடியும். விஞ்ஞானத்தை நோக்கி தமிழக கல்வித்துறை சென்று கொண்டிருக்கிறது.” என்றார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, “பெருந்தலைவர் காமராஜர் வழியில் நாடார் சமூகத்தினர் பல்வேறு கல்விக் கூடங்களைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு கல்விச் சேவையாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார். கல்வித் திருவிழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் என்ற பெருமையையும், எடப்பாடி பழனிச்சாமி பெற்றார்.” என்று, வழக்கம் போல் முதல்வரைத் பாராட்டி பேசினார். விருதுநகரில் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இரு அமைச்சர்களும் பரிசுத்தொகை வழங்கினர்.