தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ்வழியில் குடமுழுக்கு செய்யகோரியும், தஞ்சை கோயில் குடமுழுக்கு தமிழில் பூஜை செய்வதை உறுதி செய்யும் பொருட்டு கண்காணிப்பு குழு அமைக்க கோரி இந்துசமய அறநிலையத்துறை இணை இயக்குனரிடம் சைவத் தமிழ் மந்திர வழிபாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவில் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் பொருட்டு கண்காணிப்பு குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும். கோயில்களில் உள்ள இறைவன் இறைவி ஆகியோரின் பெயர்களை சமஸ்கிருதத்திலிருந்து மீண்டும் தமிழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், தமிழக அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற பிராமணரல்லாத 205 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும். தமிழக அர்ச்சகர்கள் பயிற்சி பெற்று வேலை இல்லாமல் இருக்கும் காலங்களில் இடைக்கால ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் எதிர்வரும் காலங்களில் சமஸ்கிருதத்தை நீக்கி தமிழில் மட்டுமே குடமுழுக்கு பூஜை ஆகியவற்றை நடத்திட முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனரிடம், மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து சைவத் தமிழ் மந்திர வழிபாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.