Skip to main content

கட்சிப் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல். மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளரான  இவர், வீட்டில் குடும்பத்தினருடன் 10.03.2020 அன்று தூங்கிக்கொண்டிருந்தார். அவருடன் சித்தப்பா மகன் முகேஷ் தங்கியிருந்தார்.

வீட்டுவாசலில் அவரது பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு இவரது பைக் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் கல்வீசி ஜன்னல் கண்ணாடி உடைக்கப்படும் சத்தம் கேட்கவும் கண்விழித்த சக்திவேல் வெளியே வந்து பார்த்தபோது பைக் எரிந்து கொண்டிருந்தது உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். தீயை அணைப்பதற்குள் பைக் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

 

Hindu munnani person who burned his bike  won for the post in the party


இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர். ஜீயபுரம் டிஎஸ்பி கோகிலா சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து மோப்ப நாய் அர்ஜுன் உதவியுடன் துப்பு துலக்கினர்.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.  மேலும் இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிரமாக விசாரித்தனர், அதில் சக்திவேல் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தொடர்ந்து அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா மற்றும் விசாரணையில் இரவு 11.30 மணிக்கு ஸ்கூட்டிக்கு பெட்ரோல் நிரப்பிய பின்னர் தனியே ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை வைத்து போலீசார் தொடர்ச்சியாக விசாரணையில் நெருக்கடி கொடுத்தபோது சக்திவேல் தனக்கு இந்து முன்னணி கட்சியில் மாவட்ட அளவில் பெரிய பொறுப்பு வேண்டும் என்கிற எண்ணத்தில் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாகவும்,  தற்போது சிஏஏவிற்கு எதிரான போராட்டத்தில் தனது டூவீலரை எரித்துவிட்டால் பழி போராட்டக்காரர்கள் மீது விழும், இதனால் இந்து முன்னணியில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் தன்னைத் தேடி வந்து பொறுப்பு வழங்குவார்கள் என்று நினைத்துதான் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

Hindu munnani person who burned his bike  won for the post in the party


மேலும் தான் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை செலுத்தாததாலும் டூ வீலர் கடன் தொகை கட்டமுடியாமல் தவிர்ப்பதாலும் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக இந்த எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பைக்கை சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் மற்றொரு சக்திவேல், முகேஷ் ஆகியோர் தீ வைத்து எரித்தும் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்து முன்னணி சக்திவேல் மீது ஏற்கனவே அடிதடி வழக்கு சோமரசம் பேட்டை காவல் நிலையத்தில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. டிஐஜி பாலகிருஷ்ணன், எஸ்.பி  ஜியாவுல்ஹக்,  டிஎஸ்பி கோகிலா ஆகியோரின் துரித நடவடிக்கையால் குற்றவாளிகள் உடனே சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்