சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக, வெளிமாநிலங்களில் இருந்து பிரியாணி கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட கன்றுக்குட்டிகளின் இறைச்சிகள் சுமார் 600 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் கூவம் நதிக்கரை ஓரமாக சுகாதாரமற்ற முறையில் கேடு விளைவிக்கும் வகையில் ஆட்டிறைச்சிகள் வெட்டப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எழும்பூர் போலீசாருடன் அங்கு சென்ற சுகாதாரத்துறையினர், வெட்டி தயாராக வைக்கப்பட்டிருந்த இறைச்சியை ஆய்வு செய்தனர். அப்போது அவை ஆட்டிறைச்சிகள் அல்ல என்பதும் கன்றுக்குட்டிகளின் இறைச்சி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 600 கிலோ கறியை பறிமுதல் செய்த அதிகாரிகள், 9 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அந்த இறைச்சி வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகளின் இறைச்சிகள் என்பதும், ஆட்டிறைச்சியைப் போல் இருப்பதற்காக எலும்புகள் இல்லாமல், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கன்றுக்குட்டிகளின் இறைச்சிகளை சென்னையில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் வாங்கிச் சென்று, எஸ்ஸன்ஸ் கலந்து மட்டன் பிரியாணியாக சமைத்து விற்பதும் தெரியவந்துள்ளது.