கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று அரசு உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் ஆனைக்கட்டி மலைக்கிராமம் அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் 213 பேர் அரசு உயர் நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள பழங்குடி மாணவர்களுக்கும், கேரளாவில் உள்ள தமிழ் மாணவர்களும் கல்வி கற்கவும் இந்தப் பள்ளி பெருந்துணையாக இருந்து வருகிறது. அதேசமயம் அந்தப் பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால், பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து, சின்னத்தடாகம் பகுதியில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்ததோடு, பள்ளியைவிட்டு நிற்பதும் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அப்பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என ஆனைக்கட்டி பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுதல், ஆசிரியர்கள் நியமித்தல் உள்ளிட்டவைகளுக்காக 1 கோடியே 79 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் மாணவ, மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கல்வியாண்டில் இருந்தே மாணவர்கள் சேர்க்கையை துவக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தாண்டு 11ஆம் வகுப்புகள் துவக்கப்பட்டால் கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து சிரமமின்றி பயில உதவியாக இருக்குமென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், கலை மற்றும் தொழில் பாடப்பிரிவுகளும் துவங்க வேண்டுமென அரசிற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனைகட்டியை ஒட்டியிருக்கும் கேரளாவில் வசிக்கும் மாணவி மெரீனா ஜென்சி இந்தப்பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
ஆனைகட்டி பள்ளியில் மேல்நிலை வகுப்புகள் இல்லாததால் தற்போது தேனியில் பாட்டி வீட்டில் இருந்து +1 வகுப்பு படித்து வருகிறார். ஆனைகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டே +1 வகுப்புக்கான சேர்க்கையைத் தொடங்கி இருந்தால் தன்னை போன்ற மலைவாழ் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார் கனத்த மனதோடு.