விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருகின்றனர்.
ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், வார விடுமுறையாக வியாழன் அறிவித்தல், உலக இந்து தினத்தை அறிவித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உத்தரபிரதேசத்தில் ரத யாத்திரை துவங்கியது. மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வரும் ரத யாத்திரை மார்ச் 20ல் ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பின் அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.
இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கேரளாவில் இருந்து தமிழகம் வரவுள்ள நிலையில் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. யாத்திரை மூலம் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதி வழங்கக் கூடாது என எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.