கடந்த 5 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்படாமல் இருந்தது. நீதிமன்றத்தை திறக்கக்கோரி, பல்வேறு சங்க தலைவர்கள் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கையை எல்லாம் பரிசீலிக்க ஏழு நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது இந்தக் குழு கூடி செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் இனிப்புகள் கொடுத்து இதனை வரவேற்றனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று சென்னை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம், கோயம்பத்தூர் மாவட்ட நீதிமன்றம், வேலூர் மாவட்ட நீதிமன்றம் மற்றும் கடந்த 24-ம் தேதி பாண்டிச்சேரி மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாகவும் அகில் இந்திய வழக்கறிஞைர்கள் சங்கம் சார்பாக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றது.
இதன் காரணமாக வரும் 7-ம் தேதி முதல் சென்னை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தை திறக்க தலைமை நீதியரசர் உத்தரவிட்டுள்ளார். இதனால் நீதித்துறைக்கு முதலில் மகிழ்ச்சியை தெரிவித்துகொள்கிறொம்.
ஐந்து மாதம் காலமாக வாழ்வாதாரமின்றி வழக்கறிஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் காரணமாகவே தொடர்ப்போராட்டங்கள் நடத்தினோம் என்பதையும் இந்த இடத்திலே தெரிவித்துகொள்கிறேன். அதேசமயம் மாவட்ட நீதிமன்றங்களும், லா சேம்பர்களும் எப்போது திறக்கும் என்பதை இதுவரை நீதியரசர்கள் தெரிவிக்கவில்லை. அதனால் அவற்றையும் உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மேலும் ஐந்து மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து நிற்கும் எங்களுக்கு தமிழக அரசு ரூ.10,000 மற்றும் வட்டியில்லா கடனாக ரூ.5 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகளை வைத்தோம். ஆனால் இவ்விரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றவில்லை. இதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
நீதியரசர், வழக்கறிஞர்கள் இரு வகைகளில் வழக்காடலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால், வீடியோ கான்ஃப்ரன்ஸ் முறையை பின்பற்றாமல் பழைய நடை முறையை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். இது தொடர்பாக நீதியரசரை சந்திக்க நேரம் கோரி மெயில் அனுப்பியுள்ளோம். நாளை முதல் போக்குவரத்து மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆறு பெஞ்சு மட்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவாக மொத்த நீதிமன்றமும் செயல்பட அனுமதி அளிக்கவேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுகொள்கிறோம்.” என்று தெரிவித்தார்கள்.