Skip to main content

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க ஒதுக்கீடு செய்த நிதியை முழுமையாக வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

High Court orders Tamil Nadu government to fully disburse funds allocated for the disabled ..!


கரோனா நிவாரண நிதியாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 133 கோடி ரூபாய் முழுமையாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரித்த நீதிபதிகள் உதவி தொகை வழங்க அரசு ஒதுக்கீடு செய்த 133 கோடி ரூபாயில் வழங்கப்பட்ட 69 கோடி ரூபாய் தவிர மீதமுள்ள 64 கோடி ரூபாய் நிலை என்ன, 133 கோடி ரூபாய் தொகை எப்படி வினியோகிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

 

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை, பென்ஷன் வழங்குவது குறித்த விவரங்கள் மட்டுமே அரசு தாக்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், உதவி தொகை குறித்த விவரங்கள் முறையாக தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

 

மேலும் மாற்று திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி மற்றவர்களுக்கு கொடுக்கு நிவராண தொகையை விட 25% அதிகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், கரோனா நிவாரண நிதியாக மாற்றுத்திறனாளிக்கு 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரண தொகையை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. 

 

தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை எவ்வளவு, எந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தலாம் என தெரிவித்தனர். மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட 133 கோடி ரூபாய் முழுமையாக 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கிய விவரம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்