அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரத்திற்குப் பிறகு நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்சியை தன்வசப்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் பன்னீர்செல்வம் அதிமுகவின் கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்திவந்ததால், எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்சியின் சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நேரத்தில் இப்படி கட்சியின் பெயர்கள், சின்னம், உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுவதாக பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கக் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தார்.