Skip to main content

விதிமுறைகளை மீறி செயல்படும் மணல் குவாரியை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

High Court orders closure of sand quarry operating in violation of norms

 

விழுப்புரம் மாவட்டம் பெண்ணையாறு, கடலூர் மாவட்டம் வெள்ளாறு உட்பட தமிழகத்தில் பல ஆறுகளில் அரசு மணல் குவாரிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியோடு செயல்படும் இந்த மணல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக பல புகார்கள் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

 

விழுப்புரம் மாவட்ட வழியாக கடலில் சென்று கலக்கிறது தென்பெண்ணை ஆறு. சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆற்றில் ஏனாதிமங்கலம் கிராமத்தை ஒட்டி ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, ‘ஏற்கனவே இப்பகுதியில் ஆண்டு கணக்கில் குவாரி அமைக்கப்பட்டு ஏகப்பட்ட மணல் அள்ளப்பட்டதால் ஆற்றில் நீர் தங்காமல் ஓடி கடலில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எனவே மணல் குவாரி அமைக்கக் கூடாது’ என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

அதையும் மீறி மணல் குவாரி செயல்பட அரசு உத்தரவிட்டது. அந்த மணல் குவாரியில் அரசு நிர்ணயித்த அளவை மீறி மணல் அள்ளப்படுகிறது. நான்கு மீட்டர் ஆழம் வரை மணல் தோண்டப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. அளவுக்கு அதிகமான மணலை எடுத்து சேமித்து வருகின்றனர். மணல் எடுக்க இரண்டு பொக்லைன் மட்டும் பகல் நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால் எட்டுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் 24 மணி நேரமும் மணல் அள்ளுகின்றன.  

 

இது குறித்து பல புகார்கள் அதிகாரிகளுக்கு அனுப்பியும் இது குறித்து எந்த அதிகாரியும் ஆய்வு செய்ய வரவில்லை. விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் மிக அதிக அளவில் குறைந்து வருகிறது. எனவே தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் மணல் குவாரி இயங்க தடை விதிக்க வேண்டும், மணல் குவாரியை மூட வேண்டும் என்று கூறி ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, ஏனாதிமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் செயல்படும் மணல் குவாரி இயங்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், ஹேமராஜன் மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்