மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள ஆவண அறைக்குள் பெண் அதிகாரி ஒருவர் சென்று ஆவணங்களை எடுத்ததாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் தொடுத்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
![The High Court ordered to transfer Madurai District Collector](http://image.nakkheeran.in/cdn/farfuture/UJfscIcasEnI6wRBHwgaX5IAuBfvSkpyAI76FJP-1Fo/1556372647/sites/default/files/inline-images/smpurnam_2.jpg)
மதுரையில் கடந்த 20 ஆம் தேதி பெண் அதிகாரி ஒருவர் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் சிலருடன் நுழைந்ததாகவும், அவர் அங்கே 2 மணி நேரம் இருந்ததாகவும், முக்கிய சில ஆவணங்களை எடுத்துச்சென்றதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து எதிர்க்கட்சியினர் அங்கே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தாசில்தார் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்,
![The High Court ordered to transfer Madurai District Collector](http://image.nakkheeran.in/cdn/farfuture/J2wtS6TUbAt7JhDM0F0rzNN6DfIOVgCOeTnwpjXt_Zk/1556372663/sites/default/files/inline-images/nrt_5.jpg)
இது தொடர்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் தொடுத்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ஆட்சியரின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில் வட்டாச்சியர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில் 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என வாதிடப்பட்டது.
எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் எனக்கூறிய நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் இருக்கும் போது தமிழக தேர்தல் அதிகாரிக்கு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லையா? என கேள்வி எழுப்ப மாநில தேர்தல் அதிகாரி போஸ்ட்மேன் மாதிரிதான் அவரால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என ஆணையம் வாதிட்டது.
மதுரை ஆட்சியரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது என்ற கேள்வியை நீதிபதிகள் முன்வைத்தனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை சற்றுநேரம் ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் உதவி தேர்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யவும், ஆட்சியரின் உதவியாளர், வட்டாட்சியர் மற்றும் அவரை உள்ளே அனுமதித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.