Skip to main content

கோவையில் அலங்கார வளைவுகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு - மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
கோவையில் அலங்கார வளைவுகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு - மு.க.ஸ்டாலின் வரவேற்பு

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவுகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது வரவேற்கதக்கது என கோவையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி பொறியாளர் ரகு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ரகுவின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் துக்கம் விசாரித்தார். 

இதைத்தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியின்போது கூறுகையில்;-

அதிமுக கட்சியினரால் வைக்கப்பட்ட அலங்கார வளைவினால், கோவையை சேர்ந்த ரகுபதி பொறியாளர் உயிரிழந்துள்ளார். மணக்கோலத்தில் பார்க்க வேண்டியவரை, பிணக்கோலத்தில் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்தேன். சாலைகளின் ஓரங்களில் அலங்கார வளைவுகள் வைக்க கூடாது என்றும், உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களையும் வைக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்திரவிட்ட போதிலும், அதிமுகவினர் இதை கண்டுகொள்வதில்லை. முதல்வர், துணைமுதல்வர் இருவரின் படங்களுடன் கூடிய ராட்சத பலூன் பறக்க விட்டத்தையும் நான்றாக அறிவோம். 

திமுகவில், செயல்தலைவராக பொறுப்பேற்றதும், எந்த நிகழ்ச்சிக்கும், பொதுமக்களுக்கு இடையூராக கட் அவுட்டுகள் வைக்க கூடாது என தெரிவித்திருந்தேன். இதுபோன்ற ஆடம்பரத்தை பொதுமக்களும் விரும்புவதில்லை. இதை தொடர்ந்து திமுக கடைபிடித்து வருகின்றது. ஆனால் அதிமுகவினர் நீதிமன்ற உத்திரவை மீறி வைத்து வருகின்றனர். 

கோவையில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கை அழைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறிவுறுத்துனேன். இந்த வழக்கில் திமுக வழக்கறிஞர் வில்சன் சிறப்பாக வாதாடினார். தற்போது இந்த வழக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். அலங்கார வளைவுகள் அனுமதி வாங்கி வைக்கலாம் என்ற சூழல் உள்ளது. ஆனால், அந்த அனுமதியை கூட அளிக்க கூடாது. 

பொறியாளர் ரகுபதியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, திமுக சார்பிலும், தலைவர் கலைஞர் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன். கோவையில் செல்லும் இடமெல்லாம் நடைபாதையை கூட ஆக்கிரமித்து கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, ரகுபதி இழப்பிற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

அருள்

சார்ந்த செய்திகள்