சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கான மாணவர்களிடம் ரூ. 88.66 கோடி மோசடி செய்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக வேந்தர் மூவிஸ் இயக்குநராக இருந்த மதன், தனியார் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மாணவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர். இதனையடுத்து பணம் கொடுத்துப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, பாரிவேந்தர் ரூ.88.66 கோடியை திருப்பி அளித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறி இவர்கள் இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை பாரிவேந்தருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சம்மன் அனுப்பி வந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையின் சம்மனுக்குத் தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரிவேந்தர் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், நீதிபதி வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (02.09.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகி, “ரூ. 88 கோடி திருப்பி அளித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதால் இது தொடர்பான விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சம்மன் ரத்து செய்யக்கூடாது” என வாதிட்டார். இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “விசாரணை அமைப்புகள் தங்களது கடமைகளைச் செய்வதைத் தடுக்க முடியாது. எனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் இருந்து பாரிவேந்தர் விடுவிக்கப்பட்டதால் அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது” எனத் தெரிவித்து பாரிவேந்தர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.