சென்னையைச் சேர்ந்த ஏ. ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும் உள்ளன. இந்த நிலங்களை பொதுத் தீட்சிதர்கள் சரிவரப் பராமரிக்கவில்லை என்பதால் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அனுப்பினேன்.
அதன் பின்னர் அந்த மனு கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விசாரணை கூட்டம் கூட்டினார். இருப்பினும் இந்த புகார் தொடர்பாக எந்தவொரு உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை நாடியுள்ளேன்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அமர்வில் இன்று (05.10.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான கடலூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நிலங்களை மீட்பதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டும். இது தொடர்பாக 12 வாரங்களுக்குள் நிலங்களை மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனக் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.