கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சினிமா மோகத்தில் சென்னை வந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதேபோல் சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அப்பெண்ணுக்கு கடவுள் பக்தி அதிகம் என்பதால் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்பொழுது காளிகாம்பாள் கோவில் குருக்களாக இருந்த கார்த்திக் முனுசாமி என்பவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். பிறகு இருவரும் அடிக்கடி பேசிப் பழகி உள்ளனர். கார்த்திக் பென்ஸ் கார் ஒன்று வைத்திருந்த நிலையில் அந்தக் காரில் அவரை ஏற்றிக்கொண்டு வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் தீர்த்தம் என எதையோ குடிக்க கொடுக்க, அவரும் குடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்த நிலையில் அப்பெண்ணை அர்ச்சகர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
தான் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டது அறிந்து அப்பெண் அர்ச்சகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பயந்த அவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் செல்போனை அப்பெண் ஆய்வு செய்தபோது பல பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். தன்னுடைய படங்களையும் அர்ச்சகர் கார்த்திக் பல நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளது மேலும் அப்பெண்ணுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் அர்ச்சகர் கார்த்திக் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து, விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை கொடைக்கானலில் வைத்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
இதனிடையே, கோவில் அர்ச்சகரான கார்த்திக் முனுசாமி தனக்கு ஜாமீன் வேண்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தை ஜாமீன் வழங்கியும், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு வாரம் கார்த்திக் முனுசாமி கையெழுத்திட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலியல் வழக்கில் சிக்கிய கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்க பாதிக்கப்பட்ட பெண் மற்றும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் ஜாமீன் வழங்கியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.