
ஆயுள் தண்டனைக் கைதியை முன்கூட்டியே விடுதலை செய்து இரண்டு வாரங்களில் ஆணை பிறப்பிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளையும், 60 வயதுக்கு மேலான ஆயுள் கைதிகளையும் முன்கூட்டியே விடுதலை செய்து தமிழக அரசு 2018 பிப்ரவரியில் அரசாணை பிறப்பித்தது. கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழனிச்சாமியை இந்த அரசாணையின்படி, விடுவிக்கக் கோரி அவரது மனைவி அரசுக்கு விண்ணப்பித்தார்.
ஆனால், 9 ஆண்டுகள் 24 நாட்கள் மட்டுமே தண்டனை அனுபவித்துள்ளதாகக் கூறி, பழனியப்பனை விடுவிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. இந்நிலையில், விசாரணை கைதியாக பழனிச்சாமி, கோவை சிறையில் இருந்த 349 நாட்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி, பழனிச்சாமியை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களில் அவரை விடுதலை செய்து ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தண்டனை குறைப்பு வழங்கும் அதிகாரம் ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் உள்ளதால், பழனிச்சாமியை விடுதலை செய்வது தொடர்பாக 2 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பழனிச்சாமியை விடுதலை செய்வது தொடர்பாக இரண்டு வாரங்களில் ஆணை பிறப்பிக்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அவரை முன் கூட்டி விடுதலை செய்யக் கோரிய விண்ணப்பத்தை மறு பரிசீலனை செய்து எட்டு வாரங்களில் முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.