Skip to main content

வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

High Court dismisses contempt of court Velumani case

 

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்குகளை கடந்த முறை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என்றும், நிலுவையில் உள்ள இந்த வழக்கை எதிர்மறையாகக் கருதக்கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளனர்.

 

இந்நிலையில், உத்தரவை மீறி இந்த வழக்கு குறித்து பத்திரிகை, ஊடகம், சமூக வலைதளம் ஆகியவற்றில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்தினருக்கு எதிராக அமைச்சர் வேலுமணி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை எதிர்மறையாகக் கருதக்கூடாது என்றுதான் உத்தரவிட்டுள்ளோமே தவிர, பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடவில்லை எனத் தெளிவுபடுத்தினர். மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் தவறில்லை என்றும், அமைச்சர் வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அரசியல் நோக்குடன் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும், அமைச்சர் வேலுமணிக்கு 10 ரூபாய் அடையாள அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டபோது, உள்நோக்குடன் இந்த வழக்கை தொடரவில்லை என வேலுமணி தரப்பில் தெரிவித்ததை அடுத்து அபராதத்தை மட்டும் நீக்கினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்