Skip to main content

ஜி.எஸ்.டி. செலுத்தும்படி பிறப்பித்த ஆணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
The High Court bans the order issued to pay GST!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TANGEDCO) என்பது மின் உற்பத்தி, பகிர்மானம், கொள்முதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து உத்தரவுகளை பிறப்பிக்கும். அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை வசூலிக்கப்பட்ட இந்தக் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியாக ரூ.6.97 கோடி செலுத்தும்படி ஜி.எஸ்.டி. கூடுதல் இயக்குநர் மே 6 ஆம் தேதி (06.05.2024) தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதனையடுத்து இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சத்தயநாரயணா பிரகாஷ் அமர்வில் இன்று (29.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அதன்படி அவர் வாதிடுகையில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அரசு அளிக்கும் நிதியைக் கொண்டு செயல்படுகிறது. எனவே இந்த ஆணையம் விதிக்கும் கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் அனைத்தும் அரசுக்கு செலுத்தப்படுகிறது. அதற்கு வரி விதிக்க முடியாது. எனவே இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரூ.6.97 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தும்படி ஜிஎஸ்டி கூடுதல் இயக்குநர் பிறப்பித்த நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி ஜி.எஸ்.டி கூடுதல் இயக்குநருக்கும், கூடுதல் ஆணையருக்கும் உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 1 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்