கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கீழ்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்க ஏரியில் தற்போது 28 அடி தண்ணீர் நிரம்பி உள்ளதால், இன்று முதல் 120 நாட்களுக்கு, 175 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் 65 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 24,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான சி.வி.கணேசன் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "வினாடிக்கு 175 கன அடி வீதம் 120 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் திறந்து விடப்படுகிறது. மேலும், நூற்றாண்டு பழமையான இந்த நீர்த்தேக்கத்தை செம்மைப்படுத்தவும், கரையைப் பலப்படுத்தி தூர்வாருவதற்காகவும் 130 கோடி ரூபாய் நிதி பெறுவதற்காக தமிழக முதல்வரிடம் துறை சார்ந்த அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். முதல்வர் நிச்சயம் நிதி ஒதுக்கீடு செய்து, ஏரியைச் சீர்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவார். தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தி விவசாயப் பணிகளில் ஈடுபடுமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருணகிரி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், விவசாயச் சங்கப் பிரமுகர்கள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏரியில் இருந்து பாசன வசதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெலிங்டன் நீர்த்தேக்கத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயப் பணிகளில் தற்போது ஈடுபட்டு உள்ளனர்.