தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் வருடம்தோறும் பட்டாசுக் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இத்தகைய சூழலில் தான் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உரிய முடிவு எடுக்குமாறு கூறி டெண்டர் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன்பு இன்று (17.10.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், “யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை எனக் கடந்த 15ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14ஆம் தேதியே டெண்டர் வழங்கப்பட்டு விட்டது. 10ஆம் தேதியே அதற்கான தொகை பெறப்பட்டுவிட்டது என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் வாதிடுகையில், “ஏற்கனவே டெண்டர் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “அப்படியென்றால் டெண்டர் இன்னும் வழங்கப்படவில்லை என ஏன் தெரிவிக்கப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், “மதுவை விற்கும் அரசால் பட்டாசுக் கடை அமைக்க முடியாதா?” எனவும் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், “காரணமில்லாமல் அரசைக் குறை கூற வேண்டாம். அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது" எனவும் தெரிவித்தார். அப்போது நீதிபதி, “தனி நபர்களுக்குச் செல்லும் வருமானம் அரசுக்கு வர வேண்டும் என்ற நோக்கிலேயே தான் கூறினேன்” எனக் குறிப்பிட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.