Skip to main content

அண்ணாமலைப் பல்கலையில் அதிகக் கட்டண வசூல்: கி.வீரமணி கண்டனம்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
அண்ணாமலைப் பல்கலையில் அதிகக் கட்டண வசூல்: கி.வீரமணி கண்டனம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு வசம் கொண்டு வரப்பட்டது. ஆனால், கட்டணம் மட்டும் பழைய முறையிலேயே இருந்து வருகிறது. ஒரு அரசுக் கல்வி நிறுவனத்தில் அரசுக் கல்லூரிகளில், பல்கலைக் கழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிப்பதுதானே சரியானது. இந்த வகையில் மாணவர்கள், பெற்றோர்கள் போராடுவது சரியானதே - நியாய மானதே. முதலமைச்சர் இதில் தலையிட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மாத காலமாக நடைபெறும் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், முன்பு ஏற்பட்ட சீர்கேடுகள், அளவுக்கு அதிகமான திடீர் நியமனங்களால் ஏற் பட்ட கடும் நிதிச் சுமை - இவை காரணமாக சம்பளம் கூட ஊழியர்களுக்குத் தர இயலாது திணறித் திக்குமுக்காடிய நிலை யிலிருந்து அதனைக் காப்பாற்றிட, வேறு வழியின்றி தமிழ்நாடு அரசு, ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமிழக அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டு, திரு.சிவதாஸ் மீனா அய்.ஏ.எஸ். அவர்களை தனி அதிகாரியாக நியமித்து, ஒழுங்கு படுத்திட்ட நிலை ஏற்பட்டது.

தேவைக்கு அதிகமாக நிரம்பி வழிந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை மற்ற அரசு கல்லூரிகளுக்கு மாற்றல் செய்து, தற்போது ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலை ஏற்பட்டது.
அரசு பல்கலைக் கழகத்தில் கட்டண வசூல்
ஆனால், கட்டணம் - மாணவர்களிடையே வசூலிப்பது, முன்பு தனியார் வசமிருந்த பல்கலைக் கழக நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்ட கட்டணங்களையே வசூலிப்பது முற்றிலும் சட்ட விரோதம் - நியாய விரோதம் ஆகும்.

எப்போது அரசு பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டு விட்டதோ, அந்த வகையில், அரசு கட்டண விகித முறையில்தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் - பெற்றோர்கள் கோரிக்கை எழுப்பி, போராடுவது நியாயமானதே!

தமிழக அரசு ஏற்று, இந்நிறுவனம் பொலிவோடும், வலி வோடும் நடைபெற, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பைப் பெறுவது அவசர அவசியமாகும்! எனவே, தமிழக அரசின் மற்ற மருத்துவக் கல்வி நிறுவனக் கட்டணங்களையே வசூலிக்க உடனடியாக அறிவிப்புச் செய்தல் முக்கியமாகும்!
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருக!

உயர் கல்வித் துறை அமைச்சர், முதலமைச்சர் இதில் முக்கிய கவனஞ் செலுத்தி, ஒரு மாத அறப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வற்புறுத்துகிறோம்! இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்