சென்னையில் ஒன்பதாம் வகுப்பு சிறுவன் ஆசிரியர்கள் அடித்துத் துன்புறுத்தியதாக கூறி வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடியை சேர்ந்தவர் சேகர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இளைய மகன் பாரதி செல்வா அதேபகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏன் நன்றாக படிக்கவில்லை எனத் தந்தை சேகர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் பாரதி செல்வா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் பாரதி செல்வா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது சகோதரன் பாஸ்கர் சாரதி தற்கொலை குறித்து கொரட்டூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எடுத்த வீடியோ ஒன்று போலீசார் கையில் சிக்கியது. அதில் பேசும் சிறுவன், ''ஹாய் காய்ஸ் பாருங்க நான் தற்கொலை பண்ணப்போறேன். கைல பாருங்க ப்ளட் வருது. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் ஸ்கூல்ல இருக்க மிஸ் எல்லாமேதான். வாழ்க்கையே பிடிக்கல. இந்த உலகத்த விட்டுட்டு போறேன். லட்சுமி ஸ்கூல இழுத்து மூடனும். இப்பொழுது உங்களிடம் இருந்து விடைபெறுவது பாரதி செல்வா'' என்று பேசிவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.