விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற ஒன்பது வயது சிறுமி, சைக்கிள் வாங்குவதற்காக கடந்த 4 ஆண்டுகளாக உண்டியலில் பணம் சேமித்து வந்துள்ளார். கேரளாவில் மழை வெள்ள பாதிப்பை டிவியில் பார்த்ததும், தனது 9 ஆயிரம் ரூபாய் சேமிப்பை நிவாரண நிதியாக வழங்கினார் அனுப்பிரியா.
ஆசையாக சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்துவைத்த பணத்தை கேரளவெள்ள நிவாரணத்திற்கு கொடுத்த அந்த சிறுமியின் ஆசையை கேள்விபட்ட ஹீரோ சைக்கிள் நிறுவனம் சிறுமி அனுப்ரியாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சைக்கிள் ஒன்றை வழங்கத் தயார் என்று ட்விட்டரில் அறிவித்தது.
இதுகுறித்து, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் முஞ்சால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனுப்ரியா! உன்னை வணங்குகிறேன், நீ ஒரு நல்ல உள்ளம் படைத்தவள். மேலும் நன்மையைப் பரப்புவாயாக. உனக்கு உன் வாழ்வின் ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய சைக்கிள் வழங்குவதில் ஹீரோ மகிழ்ச்சியடைகிறது. முகவரியை எம்மோடு பகிர்ந்துகொள்க. உனக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். கேரளாவுக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று சிறுமி அனுப்பிரியாவை பாராட்டி அவரது ஆசையை பூர்த்தி செய்ய ஹீரோ சைக்கிள் நிறுவனம் அவருக்கு புதிய சைக்கிளை பரிசாக வழங்கி சிறுமியை கவுரவப்படுத்தியது.