தேன்கனிக்கோட்டை அருகே, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை யானைக் கூட்டம் வழிமறித்ததால், அந்த வாகனத்திலேயே நிறைமாத கர்ப்பிணி குழந்தை பெற்ற திக்... திக்... சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள போலாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பசவராணி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு மார்ச் 20ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. மலைக் கிராமமான அந்த ஊரில் யாரிடமும் கார், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர். சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் வந்தது. பசவராணியை ஏற்றிக்கொண்டு உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அய்யூர் வனத்துறை சோதனைச்சாவடிக்கு சில கிலோமீட்டர் தூரம் முன்பாக சென்று கொண்டிருந்தபோது, 12 யானைகள் கூட்டமாக சாலையின் குறுக்கே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து நின்று கொண்டிருந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், வாகனத்தை நடுக்காட்டுக்குள் நிறுத்திவிட்டு, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமாருக்கு தகவல் அளித்தார்.
அவர், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசனுக்கு தகவல் சொன்னார். இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாலையில் கூட்டமாக நின்று கொண்டிருந்த யானைகளை விரட்டியதில், அவை காட்டுக்குள் சென்று விட்டன. இதற்கிடையே, பிரசவ வலியால் அவதிப்பட்டு வந்த பசவராணிக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. சம்பவ இடத்தில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து உனிசெட்டி ஆரம்ப சுகாதார நியைத்திற்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சினிமாவில் வருவதுபோல் திக்... திக்... சம்பவத்திற்கு இடையே நிறைமாத கர்ப்பிணி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.