கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார் ஆகியோர் ‘கரோனா போர் வீரர்களாக’ அழைக்கப்படுகின்றனர். நாம் பாதுகாப்பாக இருப்பதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.
அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இன்று இந்திய விமானப்படை போர் விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், திப்ருகார் முதல் கட்ச் வரையும் பறந்து சென்று கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது மலர்களைத் தூவும் என்று முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று அரசு மருத்துவமனைகள் மீது விமானப்படை விமானங்கள் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார் நின்றிருந்தனர். அவர்கள் மீது விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதேபோல் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மீதும் சூலூர் விமானப்படை ஹெலிகாப்டர் மாலை 5.45 மணி முதல் மலர் தூவும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தகவல்கள் வாட்ஸ்-அப் உள்பட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் பரவியது.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சமூக இடைவெளி விட்டு நின்றிருந்தனர். ஆனால் 5.45 மணி ஆன பின்னரும் மலர் தூவ ஹெலிகாப்டர்கள் எதுவும் வரவில்லை. மருத்துவப் பணியாளர்கள் மாலை 6 மணி வரை நின்றிருந்தனர். ஆனால் ஹெலிகாப்டர் எதுவும் வராததால் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குள் சென்று தங்களது பணியைத் தொடர்ந்தனர்.
கரோனாவை எதிர்த்துப் போராடும் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மலர் தூவும் என்று கூறினார்கள். ஆனால் ஹெலிகாப்டர் எதுவும் வரவில்லை. இதற்காக நாங்கள் எதுவும் வருத்தப்படவில்லை. எங்கள் பணியைத் தொடர்ந்து செய்வோம் என உருக்கமாகத் தெரிவித்தனர் மருத்துவமனையில் பணியாற்றியவர்கள்.
கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி மீது மலர்கள் தூவும் திட்டமே எங்களுக்கு இல்லை எனப் பதில் சொல்லியிருக்கிறது விமானப்படை.