ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி வீட்டில் 48.5 சவரன் நகைகளை காவல்துறையினரின் வாரிசுகள் கொள்ளையடித்ததாக அளிக்கப்பட்ட புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி நடராஜன். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி தர்மபுரியில் படித்த தனது மகளைப் பார்க்கச் சென்றபோது, செஞ்சியிலுள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 48.5 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி சாமான்கள், 13 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். இந்தக் கொள்ளையில், காவல்துறையினரின் வாரிசுகளான ஸ்ரீதர், மணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு 2014 நவம்பர் 7-ஆம் தேதி மீண்டும் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கைரேகைப் பதிவுகளை தாக்கல் செய்ய செஞ்சி காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்தவழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தாக்கல் செய்த ஆவணங்களை ஆராய்ந்த நீதிபதி, 2014-ல் அளித்த புகாரில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும், காவல்துறை தாக்கல் செய்த தடயவியல் சோதனை அறிக்கை திருப்திகரமாக இல்லை எனவும் தெரிவித்து, செஞ்சி காவல்நிலைய வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.