திமுகவின் தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 96வது பிறந்த நாள் கடந்த ஜூன் 3ந்தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கிளை கழகங்கள் முதல் தலைமை கழகங்கள் வரை கலைஞரின் சாதனை, செயல்களை போற்றும் போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரங்கள் செய்து அன்னதானங்கள் வழங்கினர். கலைஞரை வாழ்த்தி திமுக எம்.எல்.ஏ ஒருவர் அச்சடித்த போஸ்டர் கட்சியில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் திமுகவை சேர்ந்த நல்லதம்பி. கலைஞரின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் அச்சடித்து தொகுதி முழுவதும் ஒட்டியிருந்தார். அதில் மறைந்த பெரியார், அண்ணா, கலைஞர் படங்களோடு கட்சியின் பொருளாளர் துரைமுருகன், கிழக்கு மா.செ காந்தி எம்.எல்.ஏ, மேற்கு மாசெ முத்தமிழ்செல்வி, நல்லதம்பி எம்.எல்.ஏவின் அப்பாவும், திமுக ஒ.செவான மறைந்த அண்ணாதுரையின் படத்தோடு, தனது புகைப்படத்தை பெரியதாக போட்டவர் தற்போதைய கட்சி தலைவரான ஸ்டாலின் அவர்களின் படத்தை ஸ்டாம்ப் சைஸ் அளவுக்கு கூட போடவில்லை. இந்த போஸ்டரை பார்த்த வேலூர் மேற்கு மாவட்ட திமுகவினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆளும் கட்சியினருடன் தொடர்பில் உள்ளார் என்கிற குற்றச்சாட்டு ஏற்கனவே இவர் மீது உண்டு. தற்போது, இவர் கட்சியின் தலைவர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரின் புகைப்படமில்லாமல் போஸ்டர் அச்சடித்து ஒட்டியிருப்பது மாவட்ட திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக்கு வேலூர் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் போஸ்டரை போட்டோ எடுத்து தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர்.