தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. சிவகங்கை, கரூர், தேனி, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்டிருக்கக் கூடிய கனமழை காரணமாக பொள்ளாச்சி பகுதியில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவிலுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே கோவிலுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளனர்.
அதேபோல் கன்னியாகுமரி பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இன்று காலை முதல் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பொழிந்தது. இந்தநிலையில் தோவாளை மலைப்பகுதியில் அமைந்துள்ள செக்கர்கிரி முருகன் கோவிலுக்கு வைகாசி விசாகம் என்பதால் அதிகமான பக்தர்கள் சென்றிருந்தனர். பால்குடம் எடுத்து பக்தர்கள் மலையேறி சென்ற நிலையில் பெய்த மழை காரணமாக மலைப்பாதைகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் பக்தர்கள் மலையில் இருந்து இறங்க முடியாமல் தவித்து வந்தனர். உடனடியாக நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர் சென்று 40-க்கும் மேற்பட்ட பக்தர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.