Published on 23/07/2021 | Edited on 23/07/2021
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், நீலகிரி, கோவையிலும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைவாழ் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பேரிடர் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நியம்பியுள்ளதால், பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்திலிருந்து 45 பேரிடர் மீட்பு வீரர்கள் கோவை விரைந்துள்ளனர். இந்நிலையில், இன்றும் (23.07.2021) கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் பிற மாவட்டங்களில் மிதமான மழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் சில இடங்களில் மழைபொழிவு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.