தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை ஜூன் மாதம் என்பது மழை பொழியும் மாதமாக இல்லாத காரணத்தால் அம்மாதத்தில் மொத்தமாகவே 50 முதல் 60 மிமீ மழையே சராசரியாகப் பொழிந்துள்ளது.
ஆனால் இன்று தென் சென்னை பகுதிகளில் மட்டும் 150 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 5.30 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கத்தில் 137.6 மிமீ மழை பொழிந்துள்ளது. தரமணியில் 117.0 மிமீ மழையும், செம்பரம்பாக்கத்தில் 109.5 மிமீ மழையும், ஜமீர் கொரட்டூரில் 84 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் பூந்தமல்லியில் 74 மிமீ மழையும் நந்தனத்தில் 117.0 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு தாம்பரம் 82.0 மிமீ, நுங்கம்பாக்கம் 67.4 மிமீ என மழை பதிவாகியுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் 50 மிமீ மழையும் காஞ்சிபுரத்தில் 79 மிமீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்த்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கனமழையை பொறுத்தவரையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான அறிவிப்பில் தமிழக கடற்கரை பகுதி, குமரி கடல் பகுதி, தென் மேற்கு வங்கக் கடல், மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரையில் வீசக் கூடும். எனவே மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்யும். அடுத்து வரும் 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடரும்” என தெரிவித்தார்.