வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று (06/11/2021) இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, சென்னையில் பல்வேறு சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பணிக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர். அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில், மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மேலும் மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை தொடரும். கடலோர மாவட்டங்களில் மிக கனமழை தொடரும். சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.