தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (12.12.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, திருவாரூர், நெல்லை, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களிலும் 10 மணி வரை கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக பல இடங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் வலு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 15ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.