அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காரைக்காலிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.