அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, கோவை, திருவாரூர், திண்டுக்கல், திருப்பூர், தேனி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு, ராமநாதபுரம், நீலகிரி, குமரி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கனமழை எச்சரிக்கை காரணமாக 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம் எழுதியுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் மூலமாக அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. பேரிடர்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.