வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானியல் ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ‘மாண்டஸ்’ எனப் பெயரிடப்படவுள்ள இந்தப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நெருங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கன மற்றும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக இரு மாவட்டங்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்திலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.