தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.
நெல்லை, குமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில் ஒவ்வொருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது .எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. தென்காசியில் செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பனங்குடி, வள்ளியூர், காவல்கிணறு உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.
வரும் மே 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 15, 16, 17, 18, 19 ஆகிய ஐந்து நாட்களுக்கு விருதுநகர், தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கடிதம் மூலம் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.
கோடை கால சீசன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வரும் நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.