வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும். கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் ஒன்பது மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வரை மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வருகிறது. மேலும் நீர் வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அறிவுறுத்தியுள்ளது.