திருச்சியில், நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. விடிய விடிய சுமார் 5 மணி நேரம் வரை இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக திருச்சி மாநகரில் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தெப்பம் போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், சாக்கடை கட்டுமான பணிகள், சாலை பழுது நீக்கும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகள் பள்ளமும் மேடுமாக காட்சியளித்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை காரணமாக சாலைகள் அனைத்தும் சேரும் சகதியுகமாக மாறிவிட்டது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் குடியிருப்பு பகுதிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஈரப்பதம் காரணமாக கார்கள் ஆங்காங்கே சேற்றில் சிக்கிக்கொண்டன. இதனால் எவ்வித வாகனங்களும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த வகையில் திருச்சி கருமண்டம் ஆர்.எம்.எஸ் காலனி பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டுக்கு செல்லும் சாலையும் இதே போல் பள்ளமும் மேடுமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. தற்போது மழை காரணமாக முற்றிலும் சேரும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிக்கு மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் குடியிருக்கும் வீட்டின் அருகிலேயே உள்ள சாலையை சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் செல்லும் வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.