தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவ மழை பொழிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிண்டி, மீனம்பாக்கம், குரோம்பேட்டை, வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. ஆவடி, நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கொளத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல காட்சியளித்தது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது.
சிதம்பரம் காட்டுமன்னார்கோவில், பெருங்களூர், லால்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அனல் காற்று வீசி வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. விழுப்புரம், ஈரோடு, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. குடிநீர் பிரச்சினை நிலவி வரும் சூழ்நிலையில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.