தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் மழையைப் பொறுத்து பள்ளிக் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மேயர் பிரியா நள்ளிரவு பெய்த மழையிலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக மழை நீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களிலும் கடந்த ஆண்டு அதிகமாக தண்ணீர் தேங்கிய இடங்களிலும் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சென்னை மாநகராட்சியின் முக்கியப் பணியாக மழைநீர் வடிகால் பணிகள் முடிந்தது. போர்க்கால அடிப்படையில் இப்பணிகளை நாங்கள் முடித்துள்ளோம். 10 செ.மீ மழை 8 மணியில் இருந்து பெய்து வருகிறது. நான் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளோம். கடந்த ஆண்டு அதிகமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் நேரில் ஆய்வு செய்துள்ளோம்.
கடந்த ஆண்டு ஒரு நாள் இரண்டு நாள் தண்ணீர் இருந்தது என்றால், இந்த ஆண்டு ஓரிரு மணிநேரங்களில் முடிந்து விடும். கடந்த ஆண்டு எந்த இடங்களில் தண்ணீர் இருந்தது எனத் தெரியும். அப்பகுதிகளை எல்லாம் நீங்களும் நேரில் ஆய்வு செய்யலாம். மழை அதிகமாக வந்தாலும் அதற்கான மோட்டார்களை ஏற்பாடு செய்துள்ளோம்” எனக் கூறினார்.