தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
இது வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதாவது இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும். அதே சமயம் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி வராது என்றாலும் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, ராஜகம்பீரம், சிப்காட், முத்தனேந்தல், மூங்கில் ஊரணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்து வருகிறது, அதேபோல கரூர் மாவட்டம் வெங்கமேடு, காந்திகிராமம், வையாபுரி நகர், தான்தோன்றி மலை உள்ளிட்ட பகுதிகளிலும் சந்தைப்பேட்டை, ஆவியூர், சைலோம், குன்னத்தூர், வடக்கு நெமிலி, கலர்புரம் ஆகிய இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.
தேனி மாவட்டம் மற்றும் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. வடுகப்பட்டி, மேல்மங்கலம், தேவநானப்பட்டி, லட்சுமிபுரம், சோத்துப்பாறை, கும்பக்கரை, ஆண்டிப்பட்டி, வருஷநாடு, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. விழுப்புரத்தில் கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர், மணம்பூண்டி, தேவனூர், வடகரை, தாழையனூர், சித்தலிங்கமடம், சி.மெய்யூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவளம், கொட்டாரம், சுசீந்திரம், மருங்கூர், தேரூர் உள்ள பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது.