கோவை மாவட்டத்தில் கடும் கனமழை பெய்து வரும் நிலையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் கோவை முழுவதும் தண்ணீர் வழிந்தோடுகிறது.

சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர் மேலும் வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதால் தங்கும் இடங்களை பொதுமக்கள் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஆசாத் நகர், சாரமேடு, இட்டேரி கருப்பராயன் கோவில், கரும்புக்கடை உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சமூக கூடங்களிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தாங்கள் குடியிருக்கும் வீடுகள் மிகவும் மோசமடைந்து நிலையில் காணப்படுவதாக தெரிவித்தனர். மேலும் வேறு பகுதிகளில் தங்களை குடியமர்த்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்ட போதும் அதில் பாரபட்சம் காட்டப்பட்டதால் தாங்கள் இங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மழை பாதிப்புகள் குறித்த அனைத்து தகவல்களை அறிந்தும் மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.