கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி (30). 3 குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். இவர்களுடன் வெங்கடேசனின் தந்தை முத்துவேலும் உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வழக்கம் போல தூங்கிவிட்டனர். காலையில் எழுந்த பூங்கொடி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் சந்தேகமடைந்த அவர், உள்ளே சென்று பீரோவை பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி கொலுசு மற்றும் சுய உதவிக்குழு பணம் ரூ. 43 ஆயிரம் திருடப்பட்டிருந்ததை பார்த்து பூங்கொடி மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருடப்பட்ட வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் நகை பெட்டிகள் இருப்பதை கண்டனர். மேலும், வீட்டை சுற்றிலும் அமைக்கப்பட்ட வேலியை பிரித்து உள்ளே வந்து சென்றதையும் கண்டறிந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அதே ஊரில் பிள்ளையார்கோவில் தெருவில் வசிக்கும் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி வீட்டின் பின்புற கதவு சேதப்படுத்தப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே நுழைய திருடர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், கதவை உடைக்க முடியாததால், வீட்டிற்குள் செல்ல முடியாமல் திருடர்கள் திரும்பச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
ஒரே கிராமத்தில் ஒரு வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததும், மற்றொரு வீட்டில் திருட முயற்சி நடந்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.