புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள மழையூர் மறவன்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு இவரது மனைவி ராணி (50). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு ராணி தன் கணவன் தங்கராசு தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் ஆஜரானார். இந்த சம்பவத்தை தனது மகன்கள் பார்த்துக் கொண்டிருப்பதை மறந்துவிட்டார் ராணி. இந்த வழக்கின் விசாரணையில் போதிய சாட்சிகள் இல்லாததால் ராணி விடுதலையானார்.
இந்தநிலையில் தான் ராணியின் மகன் ஆனந்த்க்கு தன் தந்தையை கொன்ற தாயுடன் இருக்க பிடிக்கவில்லை. இதனால் குடும்ப சொத்தை பிரித்துக் கொடு என்று தாய் ராணியிடம் பல முறை கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். சில நேரங்ளில் இப்படி சண்டை போட்டால், உங்க அப்பன் கதி தான் உனக்கும் என்று ராணி ஆனந்தை மிரட்டியும் வந்துள்ளார்.
தங்கள் கண் முன்னால் தந்தையை கொன்ற தாய்க்கு தண்டனையே இல்லை என எண்ணி ஆனந்த் அப்போது அமைதியானாலும் பிறகு சொத்தை பிரித்து கேட்பதை நிறுத்தவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தாயுக்கும் மகனுக்கும் சண்டை நடந்துள்ளது.
பலமுறை சொத்தை பிரித்து கேட்டும் பயனில்லாமல் போன நிலையில், இன்று காலை வீட்டுக்குள் படுத்திருந்த தாயின் முடியை பிடித்து வீட்டுக்கு வெளியே இழுத்து வந்த ஆனந்த் மற்றொரு கையில் வைத்திருந்த அரிவாளால் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதன் பின் தாயின் தலையை தனியாக எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு தனது பைக்கில் பையை தொங்கவிட்டபடி கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு சென்று தலையை கொடுத்துவிட்டு இது எங்க அம்மா ராணியோட தலை. தலை இங்கே இருக்கு உடல் மறவன்பட்டி வீட்ல கிடக்குது என்று சொல்லிவிட்டு லாக்கப்பில் போய் அமர்ந்துவிட்டார்.
காலை நேரத்தில் இந்த சம்பவத்தைப் பார்த்த கறம்பக்குடி போலீசார் பதறிவிட்டனர். விசாரணைக்கு பிறகு மழையூர் காவல்நிலையத்தில் தலை ஒப்படைக்கப்பட்டு உடலும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.