முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு பல்வேறு அமைச்சர்கள் பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்ட தொடங்கியதோடு பொது வெளியில் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும் ஆரம்பித்தனர். அப்படி சில சமயம் அவர்கள் கூறும் கருத்துக்கள் சர்ச்சையாகவும் மாறிவிடுகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வார காலமாக காதி மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கூறிய சில கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளன.
நேற்று முன்தினம் இவர், செல்போனை கண்டுபிடித்தவனை கண்டால் மிதிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், நேற்று நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிலைமை தான் வரும் என்று கூறினார். இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விவசாய கருத்தரங்கில் பேசிய இவர், வசதி படைத்த பிள்ளைகள் குடிகாரர்களாக மாறுவதாகவும் , சரியாக படிக்காத பிள்ளைகள் வெளியூருக்கு வேலைக்கு சென்று கடனாளிகளாக மாறுகின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும், "ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் மிகவும் நன்றாக படிக்கின்றனர்" என்று கூறினார்.
வசதி படைத்த பிள்ளைகள் குடிகாரர்களாக மாறுவதாக இவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை வெளியில் இது போன்ற கருத்துக்களை பதிவிடாத அமைச்சர்கள் அவர் மறைந்த பிறகு இது போன்ற கருத்துக்களை கூறி சர்ச்சையில் மாட்டிக்கொள்வது தொடர்கதையாகியுள்ளது.