Skip to main content

தீபாவளி பட்டாசுக் கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! 

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

Apply for Deepavali Fireworks Shop License - District Collector Announcement!


தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுக் கடை நடத்த உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

 

வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையின்போது கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளைக் கடைப்பிடித்து இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

 

விண்ணப்பம் செய்பவர்கள் வெடிமருந்து சட்டம் 1984 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008 -இல் உள்ள விதி 84-ஐ முறையாகக் கடைப்பிடித்து பொது மக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாகத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

 

இதற்கு முந்தைய காலங்களில் தேர்ந்தெடுத்த இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் தற்போது விண்ணப்பத்துடன், அப்போது பெற்ற உரிமத்தையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது கடையின் வரைபடம் 6, உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல், உரிமை கோரும் இடம் வாடகை கட்டிடங்களில் இயங்குமாயின் கடை உரிமையாளரிடம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் ரூபாய் 500-க்கான கருவூல நகல் இணைக்கப்பட வேண்டும். 

 

மேலும் வீட்டு முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டின் வீட்டு வரி ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அரசு உத்தரவுப்படி, வரும் 23-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 23-ஆம் தேதிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வரும் 1ஆம் தேதிக்குப் பின்னர் உரிமம் வழங்கப்படும். என அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்