தாரமங்கலம் அருகே, கோயில் பூசாரியை இரும்பு கம்பி, கல்லால் தாக்கி மண்டையை உடைத்த காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள ஓலைப்பட்டி காட்டுவலவு பகுதியில் புதிதாக முனியப்பன் கோயில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் சேர்ந்து, கோயில் மேற்கூரையை வழக்கத்தை விட உயரமாகக் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த, சேலம் மாநகர காவல்துறை நுண்ணறிவுப்பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் முருகன் (45) மற்றும் அவருடைய உறவினர்கள், மேற்கூரையை உயர்த்திக் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோயில் பூசாரி ரமேஷ் (45), ஊர்க்காரர்கள் கூறியபடி கோயில் மேற்கூரையை உயரமாக கட்டும்படி கட்டடத் தொழிலாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தலைமைக் காவலர் முருகன், அவருடைய உறவினர்கள் பூசாரி ரமேஷை இரும்பு கம்பி, கல்லால் தாக்கினர். இதில் அவருடைய மண்டை உடைந்தது. பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தலைமைக் காவலர் முருகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது கொடுங்காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி விசாரணை நடத்தினார். தலைமைக் காவலர் முருகனை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே முருகன், தலைமறைவாகி விட்டார். அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.